மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உலகத்தரம் வாய்ந்த ஜல்லிக்கட்டுக்கென தனி பிரம்மாண்ட மைதானம் அமையவுள்ள இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கென தனி பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து மைதானம் அமைக்கப்படும் இடத்தை தேர்வு செய்யும் படி மாவட்ட கலெக்டருக்கு தமிழக முதல்வர் ஆணையிட்டார். இதைத்தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சுமளவில் சுமார் 66.8 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்து அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அணிஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், தளபதி, பூமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறுகையில். ஜல்லிக்கட்டு மைதானம் மிகப் பிரம்மாண்ட அளவில் உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் சிறப்பாக அமைய உள்ளது. ஜல்லிக்கட்டு என்பது ஒரு சில நாட்கள் மட்டும் மிகச் சிறப்பாக நடைபெற்று முடியும் நிலையில் ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் வகையில் இந்த பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்பட உள்ளது. ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் தனி மைதானம் அமைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதேபோன்று இந்த மைதானமும் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு அனைத்து போட்டியிலும் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இங்கேயே தனி மருத்துவமனை, போக்குவரத்து வசதிகள் அனைத்தும் வர உள்ளன. உலக நாடுகளுக்கு இணையாக இந்த விளையாட்டு மைதானம் அமையும். இங்கிருந்து நான்கு வழி சாலையில் சென்று சேரும் வகையில் 3 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலை அமைத்து அனைவரும் வந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் வாடிப்பட்டி சிட்டம்பட்டி நான்கு வழிச்சாலையில் இந்த சாலையை இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
மேலும் நிதி ஒதுக்கப்பட்ட உடன் ஓராண்டுக்குள் இப்பணிகளை முடிப்பதற்காக பொதுப்பணித்துறை தீவிரமாக வேலையை தொடங்கியுள்ளது. தவிர சிறந்த ஆர்க்கிடெக்சர்கள் மூலம் மைதானத்தின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து தொடங்கி விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யப்பட்டு குறுகிய காலகட்டத்தில் பணிகள் தொடங்கப்படும். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த மைதானம் அமைய பெறும். தற்போது நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் மிகக் குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. பொதுமக்கள் விரும்பினால் ஜல்லிக்கட்டு மைதானத்தில் உலகப்புகழ் ஜல்லிக்கட்டுகள் நடைபெறும்.
இன்னும் மூன்று மாதத்தில் மதுரையில் பிரம்மாண்ட கலைஞர் நூலகம் திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், பரந்தாமன், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், அவைத்தலைவர் பாலசுப்ரமணியன், விவசாய அணி நடராஜன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், மற்றும் பொதுப்பணி துறையினர், நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர் மற்றும் திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை

தொடர்பு படிவம்